கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் நாற்பதாவது பட்டமளிப்பு விழா ஆளுநர் பங்கேற்பு
கோவை: பாரதியார் பல்கலைக்கழகத்தில் 40-வது பட்டமளிப்பு விழா – 92,287 பேருக்கு பட்டம் வழங்கல்
பாரதியார் பல்கலைக்கழகம் 40-வது பட்டமளிப்பு விழா இன்று கோவையில் உள்ள டாக்டர் உஷா மேத்தா அரங்கத்தில் நடைபெற்றது. விழாவில் தமிழக ஆளுநரும் பல்கலைக்கழகத்தின் வேந்தருமான ஆர். என். ரவி தலைமை தாங்கி மாணவர்கள் மற்றும் ஆய்வாளர்களுக்கு பட்டங்களை வழங்கினார்.
தமிழ்நாடு அரசின் உயர்கல்வித் துறை அமைச்சரும், பல்கலைக்கழகத்தின் இணைவேந்தருமான கோவி செழியன் இவ்விழாவில் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
விழாவின் முதன்மை விருந்தினராக ஹோமி பாபா தேசிய நிறுவனம் துணைவேந்தர் முனைவர் காமாட்சி முதலி கலந்து கொண்டு பட்டமளிப்பு உரையாற்றினார். உயர்கல்வித் துறைச் செயலாளரும், துணைவேந்தர் குழுவின் ஒருங்கிணைப்பாளருமான முனைவர் பி. சங்கர் வரவேற்புரை நிகழ்த்தி, பல்கலைக்கழகத்தின் கல்வி மற்றும் ஆராய்ச்சி சாதனைகள் குறித்த அறிக்கையை சமர்ப்பித்தார்.
இந்த பட்டமளிப்பு விழாவில் பல்கலைக்கழகத் துறைகள் மற்றும் இணைப்புக் கல்லூரிகளைச் சேர்ந்த முனைவர் பட்டம் (Ph.D) மற்றும் டி.லிட் (D.Litt) பட்டதாரிகள் சுமார் 1,500 பேர் நேரடியாக பட்டங்களை பெற்றனர்.
மேலும் இளங்கலை, முதுகலை மற்றும் ஆராய்ச்சி படிப்புகள் உட்பட மொத்தம் 92,287 மாணவர்கள் பல்வேறு பாடப்பிரிவுகளில் பட்டங்களை பெற்றனர்.
விழா ஏற்பாடுகளை பதிவாளர் முனைவர் ஆர். ராஜவேல், தேர்வாணையர் முனைவர் கே. விஜயராணி மற்றும் பல்வேறு குழுக்களின் ஒருங்கிணைப்பாளர்கள், உறுப்பினர்கள் மேற்கொண்டனர்.

